அன்பின் அளவு

February 14th, 2017

 

வேதாகமப்பகுதி 1யோவான் 4:7-21

தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்தில் அன்புகூரவேண்டுமென்கிற.. 1யோவான்4:21

ஒரு கிறிஸ்தவ வீட்டிற்கு நான் சென்ற போது சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு பலகையில் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது ”நீங்கள் மிகக்குறைவாக நேசிக்கும் நபரை நேசிப்பது போல இயேசுவை நேசிக்கிறீர்கள்.” வெளிப்பாடுள்ள அந்த வார்த்தைகளைக்கண்டு நான் மலைத்தேன். பின்பு இதைப்போன்ற வார்த்தைகளை 1யோவான் 4:20 வசனத்தில் நான் கண்டேன். ”தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?”

அதற்குப் பின்பு, நான் என்னுடைய சொந்தத் தவறுகளைப்பாராமல் மற்றவர்களைக் குறைகூறுவதைப் பலவேளைகளில் உணர்ந்தேன். நான் குறைகூறிய மக்களை நேசிக்கிற அளவிற்கு இயேசுவை நேசித்தால், நான் இயேசுவை மிகக்குறைவாக நேசிக்கிறேன் என்று பொருள். இந்த உண்மை எனக்கு வருத்தத்தையும், சோர்வையும் அளித்தது. ஏனென்றால் நான் இயேசுவையும், மற்றவர்களையும் நேசிக்க வேண்டியபடி நேசிக்கமுடியாமல் இருந்தேன்.

1யோவான் 4:10 வசனத்தில், அன்பை அறிந்து கொள்வதற்கான வழி, தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பு அல்ல. ஆனால் அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு என்று நாம் காண்கிறோம். நம்முடைய பாவங்களுக்காக இயேசு அடைந்த தியாகமுள்ள மரணத்தின் மூலமாக அவர் தம்முடைய அன்பின் ஆழத்தை எடுத்துக்காட்டினார். அது நாம் பின்பற்ற வேண்டிய உதாரணம் ”தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.” (வச 11)

நான் மற்றவர்களை நேசிக்கத்தவறும் போது, தேவனுடைய மன்னிப்பை நாடுகிறேன். அவர் என்னிடம் காண்பிக்கும் அன்பைப் போல நானும் மற்றவர்களிடம் அன்புகாட்டுவதற்கு அவர் எனக்கு உதவிசெய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.

நீங்கள் இயேசுவை அதிகமாக நேசிக்க விரும்புகிறீர்களா? உங்களை சுற்றியுள்ள மக்களை நேசிக்கத் துவங்குங்கள். இயேசுவின் மீதுள்ள அன்பும், மற்றவர்களின் மீதுள்ள அன்பும் எப்போதும் இணைந்து செயற்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Best Web Design Batticaloa