கிறிஸ்துவுக்குள் தியாக வாழ்வு

February 14th, 2017

 

கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கை தியாகமும், சுயவெறுப்புமான வாழ்க்கை. இயேசு தனக்காக வாழவுமில்லை, தனக்காக மரிக்கவுமில்லை. கிறிஸ்துவுக்குள் வாழ்கிறவர்கள் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தவருக்காக வாழுகிறார்கள்.(2 கொரி 5:15) உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவை நீங்கள் வாழவிடும்பொழுது இந்த தியாக வாழ்க்கை உங்களுக்குத் தாராளமாய் வருகிறது.

ஆபிரகாம் இதற்கும் உங்களுக்கு மாதிரியாய் இருக்கிறார். அவருடைய வாழ்க்கை முழுவதுமே தியாகம் நிறைந்ததுதான். தனக்கு மிகவும் அருமையாயிருந்த பல காரியங்களை ஆபிரகாம் விட்டுவிட வேண்டியதாயிருந்தது. ஆபிரகாம் தகப்பன் வீட்டை விட்டான், தனது தேசத்தை விட்டான், தனது சகோதரன் லோத்தை விட்டான், ஆகாரையும் தனது சொந்த மகன் இஸ்மவேலையும் அவன் விட்டான்.(ஆதி 21:11-14) இஸ்மவேலை அனுப்பி விடவேண்டும் என்று சாராள் சொன்ன பொழுது அது அவனுக்கு மிகவும் துக்கமாயிருந்தபோதிலும், கொஞ்சம் உணவையும் ஒரு துருத்தியில் தண்ணீரையும் கொடுத்து அவர்களை அனுப்பி விட்டான்.(ஆதி 21:14) தனது நேச குமாரனான ஈசாக்கையே தகனபலியாகக் கொடுக்கவும் அவன் ஆயத்தமாயிருந்தான்.(ஆதி 22)

ஆபிரகாம் ஐசுவரியமும், ஆஸ்தியும் , மிருக ஜீவன்களும் உடையவனாயிருந்தபோதிலும், எதிலும் அவனுடைய இருதயம் ஒட்டவில்லை. அவன் பரதேசியைப்போலவும், நாடோடியைப்போலவுமே வாழ்ந்தான்.  (சங் 39:12, எபி 11:9,13) தனது அருமை மனைவியை அடக்கம் செய்வதற்குக் கூட அவனுக்கென்று சொந்தமாக ஒரு அடி நிலம் கூட அவனிடமில்லை. ஒரு பரதேசியைப்போல, அவன் தன் வாழ்நாளெல்லாம் கூடாரங்களில் வாழ்ந்தான்.

அவன் தனக்கென்று எதையும் தெரிந்து கொள்ளவில்லை. சிறந்த தேசத்தைத் தெரிந்தெடுக்கும் வாய்ப்பைக்கூட அவன் லோத்திடமே விட்டுவிட்டான். தனது தேவனில் அவன் திருப்தி கண்டான்.(ஆதி 13:11) சோதோமின் ராஜா அனைத்து ஆஸ்திகளையும் எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தியபொழுது, அதை மறுத்து விட்டான். (ஆதி 14:21-24) ஆபிரகாமை ஐசுவரியவானாக்கிய பெருமை ஆண்டவருக்கு மட்டுமே சேர வேண்டும் என்பதே அவனது ஒரே வாஞ்சை.

ஆபிரகாம் வாரி வழங்கும் வள்ளலாயிருந்தான், உபசரிப்பதில் அவனுக்கு நிகர் அவன் தான். ராஜாக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தனக்கிருந்த எல்லாவற்றிலும், மெல்கிசேதேக்கிற்குத் தசமபாகம் கொடுத்தான். (ஆதி 14:18-23) ஏத்தின் மக்கள் இலவசமாக அவனுக்கு நிலத்தைக் கொடுக்க முன்வந்த போது, அதை மறுத்து, முழு கிரயத்தையும் கொடுத்து முடித்தான். (ஆதி 23:6,11-16)

மக்கள் தனக்கு கொடுத்த கனத்தையும், கௌரவத்தையும் கூட தனக்குச் சாதமாக்கவில்லை. அவனை மிகவும் உயர்வாய் மதித்த ஏத்தன் மக்களுக்கு முன்பாகவும் அவன் திரும்பத்திரும்ப குனிந்து வணங்கினான். (ஆதி 23:7,12) ஆகவே ஆபிரகாமைக் கர்த்தர் திரளான ஜாதிகளுக்கு தகப்பனாக உயர்த்தி ஆசீர்வாதித்ததில் நிச்சயம் வியப்பில்லை.

அன்பானவர்களே, கர்த்தர் உங்களிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்திருந்தால் ஒரு நொடியும் தாமதிக்காதீர்கள். அவர் உங்களுக்குள் வந்ததே உங்கள் வாழ்வை நூற்றுக்கு நூறு அவருக்குச் சொந்தமாக்கிக் கொள்ளத்தான். அவருக்கு முற்றிலும் உங்களை விட்டுக்கொடுங்கள். எதையும் மட்டுக்கு மீறி நேசிக்காதீர்கள். எல்லாவற்றையும் விட்டுக்கொடுங்கள். இந்த ஆபிரகாமின் தியாக குணம் கிறிஸ்துவுக்குள் இன்று உங்களுடையதாகிவிட்டது. விசுவாசியுங்கள்.

உங்களுக்குள் வாழ்கிறவர் ஏற்கனவே உலகத்திற்காகத் தன்னையே கொடுத்தவர். அவர் தன்னைப் பிரியப்படுத்தி வாழவில்லை. (ரோமர் 15:3) அவர் ஒருபொழுதும் கனத்தை நாடியதில்லை. (யோவான் 5:41,44) அவர் தனக்காக எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அவரே அப்பொழுது உங்கள் புதிய ஜீவனாகிவிட்டார். அவருடைய சுவாசம் உங்கள் சுவாசமாகிவிட்டது. இந்த சத்தியத்தை நீங்கள் கண்டுவிட்டால் தியாக வாழ்க்கை உங்களுக்குத்தானாகவே வந்துவிடும். மற்றவர்களுக்காக உங்களையே உடைத்து ஊற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி காண்பீர்கள்.

நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்தீர்கள் (ரோமர் 6:9,10, கலா 2:20) இப்பொழுது நீங்கள் பிழைத்திருப்பது உங்களுக்காக அல்ல, வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் அடுத்தவருக்காகச் செலவிடப்படட்டும். பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளும் படி உங்கள் ஆவி எளிமையாகட்டும். (மத் 5:3) கிறிஸ்துவுக்குள் உங்கள் ஸ்தானத்தை அறிந்து ஆசீர்வாதமுள்ள தியாக வாழ்க்கைக்கு துணிந்து விடுங்கள். முழுமையையும் அவருக்குத் தந்தால், அவருடைய முழுமையையும் நீங்கள் அனுபவிக்கலாம். இதுதான் தெய்வீகப் பண்டமாற்று இப்பொழுதே எழும்புங்கள். அவருக்காகவும், ஆத்துமாக்களுக்காகவும் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் துணிந்து விடுங்கள் (2 கொரி 12:15)

ஆண்டவரே!

நான் கிறிஸ்துவுடனே கூட சிலுவையிலறையப்பட்டேன். ஆயினும், பிழைத்திருக்கிறேன். இனிநான் அல்ல , கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, உம்மைப்பற்றும் விசுவாசத்தினால் பிழைத்திருக்கிறேன். என்னுடைய பழைய மனுஷன் சிலுவையிலறையப்பட்டுவிட்டான். நீர் என் சரீரத்தினாலே மகிமைப்பட்டு, உம்முடைய ஜீவன் என் சரீரத்தில் வெளிப்படும். எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால் உமக்கே நன்றி. (கலா 2:20, ரோமர் 6:6, பிலிப் 1:20, 2கொரி 4:14)

Best Web Design Batticaloa