நண்பரே ஒரு நிமிடம்

February 14th, 2017

 

சமாரியாவை சீரியா தேசத்து மன்னன் பெனாதாத் முற்றுகை போட்டுள்ளான். சமாரியாவிலே பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பஞ்சத்தின் உச்சக்கட்டத்தை 2இரா 6:28-29ல் படிக்கிறோம். இம்மட்டும் நாம் கேட்டிராத கொடிய பஞ்சம். தங்கள் அன்பு குழந்தைகளையே சமைத்து உண்ணும் அளவுக்கு கொடிய பஞ்சம். சாதாரண மக்களுக்கே இந்நிலை என்றால் குஷ்டரோகிகளின் நிலை கூற வேண்டுவதில்லை அல்லவா?

நான்கு குஷ்டரோகிகள் பல நாள் பட்டினி. “கோட்டைக்குள்ளிருந்தால் பட்டினியால் சாவு. பகைவரின் பாளையத்துக்குச் சென்றால் ஒருவேளை சாப்பிட்டாவது சாகலாம்” என்ற எண்ணத்துடன் பகைவரின் பாளையத்துக்கு மெதுவாகச் செல்கின்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களால் நம்பமுடியவில்லை. பாளையத்தில் பகைவர் இல்லை. பாளையம் எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கின்றன. எங்கும் ஒரே அமைதி. ஆம்! மயான அமைதி பலவகை சமைத்துப்போடப்பட்ட உணவுகள் மலைபோல் குவிந்துள்ளன. பசி அகோர பசி. இவையெல்லாம் எப்படி சாப்பிடுவது? சாப்பிடும் அளவுக்கு சாப்பிட்டார்கள். ஒவ்வொரு கூடாரமாக ஏறி இறங்குகிறார்கள். தங்கள் தேவைக்கான அனைத்தையும் எடுத்துக்கொண்டார்கள். நீண்ட பெருமூச்சோடு பட்டினியால் வாடும் தங்கள் சகோதரர்களை நினைத்துப்பார்க்கிறார்கள்.  ஆம்! நாம் செய்வது நியாயமல்ல. நமது சகோதரர் மற்றும் குழந்தைகள் பட்டினியால் மாண்டுகொண்டு இருக்கும் போது நாம் மட்டும் சாப்பிடுவதா? என்ன அருமையான எண்ணம்! இவ்வாறு கூறுவது யார் தெரியுமா? குஷ்டரோகிகள்

அன்பானவர்களே! சற்று சிந்திப்போமா? இந்த சகோதரர்களின் வார்த்தைகள் நம்மை உணர்வூட்டவில்லையா? நாம் நல்ல சுகபெலத்தோடு வாழ்கிறோமே நமக்கு இந்த கேள்வி தேவை இல்லையா?

இன்று வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசமறியாத கோடிக்கணக்கான மக்கள் நாம் வாழும் இலங்கைத் திருநாட்டில் இருக்கிறார்களே. தங்கள் அன்புக் குழந்தைகளையே மூடப்பழக்கத்தால் கல்லுக்கும், மண்ணுக்கும் பலியிடும் அறியாமை இருளில் மூழ்கிக்கிடக்கிறார்களே. இயேசு என்றால் என்ன விலை எனக்கேட்கும் நமது சகோதரர்களுக்கு நற்செய்தி அறிவிப்பது நமது கடமை அல்லவா?

பாவத்துக்கும், சாபத்துக்கும், அடிமைத்தனத்துக்கும் பலியாகி செத்து மடிந்து கொண்டிருக்கிற மக்களுக்காக சொந்த ஊரைவிட்டு உற்றார் உறைவினரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து நற்செய்தியை சுமந்து சென்றிருக்கும் மிஷனெரிகளை நினைத்துப்பார்ப்போமா? ஆம் இன்று நற்செய்தி அறிவிக்கும் நாள். நாம் மௌனமாய் இருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்! ஒரு நிமிடம் சிந்திப்போம்.

Best Web Design Batticaloa