முயற்சி செய், விட்டுவிடாதே

February 14th, 2017

 

“நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைவதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. (2 கொரி 4:8,9)

தன்னை ஒரு சாட்சியாக நிறுத்தி, அப். பவுல், நமக்குச் சொல்லுகிற முக்கியமான ஒரு ஆலோசனை, முயற்சியை விட்டுவிடாதே. Never give up. இந்த வேத பகுதியிலே, அவர் நான்கு காரியங்களை குறிப்பிட்டார். முதலாவது, நெருக்கப்படுதல், இரண்டாவது, கலக்கமடைதல், மூன்றாவது, துன்பப்படுத்தப்படுதல். நான்காவது, கீழே தள்ளப்படுதல். ஒரு மனிதனை சோர்ந்து போகப்பண்ணுகிற, சாத்தானுடைய நான்கு கொடிய ஆயுதங்கள் இவை.

ஆனால் அப்.பவுல், அந்த ஆயுதங்களை எப்படி முறித்தார்? எப்படி ஜெயங்கொண்டார்? எப்படி தன்னுடைய முயற்சியை கைவிடாமல், கடைசி வரை நிலைநின்றார்? ஆம், அவருக்குள்ளே ஒரு உறுதியான தீர்மானம் இருந்தது. நான் ஒடுங்கிப்போகமாட்டேன். மனம் முறிவடையமாட்டேன். கைவிடப்படமாட்டேன். மடிந்துபோகமாட்டேன்.

நீங்கள் முயற்சியை கைவிடாமல், கடைசிவரை நிலைநிற்க வேண்டுமென்றால், உங்களுடைய உள்ளத்திலே, ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். விசுவாசத்தை அறிக்கைபண்ண வேண்டும். இல்லாவிட்டால், சோதனைக் காற்று வீசும்போது, மனம் தளர்ந்துபோகும். சலிப்பு ஏற்பட்டுவிடும். அப். பவுலுக்கு வந்த பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதை கொரிந்தியருக்கு எழுதும் போது, “உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும் தரித்திருந்தேன்” என்று குறிப்பிடுகிறார்.   (2கொரி 6:4,5)

தொடர்ந்து தனது பாடுகளைக் குறித்து, கொரிந்தியருக்கு எழுதும்போது, “நான் அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய, நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன், மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம்கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன். கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும்,  வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச் சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.”   (2 கொரி 11:23-28) என்கிறார்.

சில பாடுகள் உள்ளத்தோடும், ஆத்துமாவோடும் இணைந்தது. சில பாடுகள், சரீர வேதனையினால் உண்டானது. சில சிந்தனை மண்டலத்தில் உண்டானது. ஆனாலும் கர்த்தரை தொடர்வதை அப். பவுல் விட்டுவிடவில்லை. ஊழியத்தை விட்டுவிடவில்லை. தேவனுடைய ஐக்கியத்தை விட்டுவிடவில்லை. “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே”(ரோம 8:36,37)

நினைவிற்கு :- “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைப்பின் பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்கிறேன். (பிலி 3:13,14)

Best Web Design Batticaloa