உண்மையான வாலிப வாழ்க்கை

April 26th, 2017

“வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்வதில்தானே”

எனக்கு அருமைான சகோதரனே! சகோதரியே! நாம் இவ்வுலகத்திலே உதித்தது முதல் இன்றுவரைக்கும் உண்ணுகின்றோம். உறங்குகின்றோம். ஏதோ ஒரு விதத்திலே காலத்தைக்கடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் எப்போதாவது சிந்திக்கின்றோமா? எதற்காக இவ்வுலகத்தில் பிறந்தோம்? மற்றவர்களுக்கு நன்மையான பிரயோஜனமான ஏதாவது காரியங்கள் செய்திருக்கின்றோமா? வாழ்க்கையிலே எதையாவது சாதித்திருக்கின்றோமா? எம் ஒவ்வொருவரது கடந்தகால வாழ்வையும் சற்று திரும்பிப் பார்ப்போம். நாம் யார்? என்பதை உணர்ந்து கொள்ளுவோம். அதாவது தேவன் எதிர்பார்க்கின்ற உண்மையான வாழ்க்கை எம்மிடம் இருக்கின்றதா? அல்லது தேவனுக்குப் பிரியமில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? எம் ஒவ்வொருவரையும் பார்த்து எமது இதயக் கதவைத் தட்டி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கேட்கின்ற கேள்வி “உனக்காக நான் மரித்தேனே! எனக்காக நீ என்ன செய்தாய்?

ஆம் பிரியமானவர்களே! எம்முன் எத்தனை பேர் இக்கேள்விக்குப் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றோம்? எத்தனை பேர் தயங்கிக் கொண்டிருக்கின்றோம். எம் ஒவ்வொருவரையும் ஆண்டவர் படைப்புகளின் சிகரமாகப் படைத்து, நல்லது எது? கெட்டது எது? என்று பகுத்தறியக் கூடிய தன்மையையும் எமக்குத் தந்திருக்கின்றார். இவ்வாறாக இருக்கும் போது ஐயா எனக் கூறிவிடமுடியாது. எம்முள் எத்தனை பேர் இவ்வாறு கூறிக் கொண்டு வாழ்க்கையை பாவ வாழ்க்கைக்கூடாக மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றோம். எம் ஒவ்வொருவரது பாவங்களுக்காகவும், அக்கிரமங்களுக்காகவும் அன்றே ஆண்டவரைச் சிலுவையில் அறைந்து விட்டோம். எனவே மீண்டுமொருமுறை ஒப்புக்கொடுக்காமல் பார்த்துக் கொள்வது எம் ஒவ்வொருவரது கடமையாக இருக்கின்றது.

வாலிப வயதிலே எம்முள் எந்தளவிற்கு உற்சாகம். செயற்திறன் இருக்கின்றதோ, அதற்கு மேலாக மாம்ச பெலவீனம் எம்மை ஆட்கொள்ளுமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆண்டவர் தட்டுகின்ற அந்த சத்தத்தைக் கேட்டு எம் உள்ளத்திலே தங்குவதற்கு இடம் கொடுப்போமாக இருந்தால் எமது வாழ்வை வெற்றியின் வாழ்வாக மாற்ற முடியும். வாலிப வாழ்க்கை என்பது ஒரு நூலிலே நடப்பது போன்ற வாழ்க்கை! எப்போது நாம் நூலை விட்டு சறுக்குவோம், எவ்வாறு நம்மை தன் பக்கம் இழுக்கலாமென்று வகை தேடிக்கொண்டிருக்கும் சாத்தானுக்கு இரையாகி விடக்கூடாது. எனவே, வாழ்க்கை என்ற அந்த நூலிலே தடம்புரளாமல் நடக்க வேண்டுமாக இருந்தால் எம்மைப் படைத்த அந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உதவியோடு தான் முடியும்! அதற்காக எம் ஒவ்வொருவரையும் கரம் பிடித்து நடக்க வேண்டுமாக இருந்தால் எம்மைப் படைத்த அந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உதவியோடு தான் முடியும்! அதற்காக எம் ஒவ்வொருவரையும் கரம் பிடித்து நடக்க ஆண்டவர் தயாராக இருக்கின்றார். ஆனால் நான் தயாரா? நாம் தயாரா?

Best Web Design Batticaloa