உபத்திரவத்திலும் கர்த்தரோடு….

September 18th, 2017

“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன். (யோவான் 16:33)

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உலகத்திலே உபத்திரவம் உண்டு என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே வேதாகத்தில் எழுதப்பட்டாயிற்று. உபத்திரவம் என்கின்ற போது வியாதியின் தொடுகை, வறுமை, உறவுகளின் பிரிவு, தோல்விகள் என்பவற்றினை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இப்படிப்பட்ட உபத்திரவங்களை அனுபவித்தும் கர்த்தரை விட்டு விலகாமல், அவருடன் நெருங்கி வாழ்ந்த நபர் தான் யோபு. பிசாசானவன் யோபுவை சோதிக்கும்படி அவனுடைய ஆஸ்தி, செல்வங்கள், பிள்ளைகள் எல்லாவற்றையும் அவனிடத்தில் இருந்து பிரித்துவிட்டபோதும் யோபு கர்த்தருக்கு எதிராக பாவஞ்செய்யவும் இல்லை, குற்றஞ்சாட்டவும் இல்லை. மாறாக யோபு அந்த உபத்திரவத்தின் மத்தியிலும் கூறிய வார்த்தையை                   யோபு 1:21 இல் வாசிக்கலாம். அதேபோல் பிசாசானவன் கொடிய வியாதியினால் யோபுவை வாதித்தான். அப்பொழுது பொறுமையை இழந்த மனைவி கர்த்தரை தூஷிக்கும்படி கூறியபோதும் யோபு அவளுக்கு மறு உத்தரவாக. “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமா” என்றான்.   (யோபு 2:10)

எனக்கு அருமையான சகோதர சகோதரிகளே! இன்று எம்மையும் யோபுவுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். கர்த்தர் இன்று எனக்கும் உங்களுக்கும் செய்த ஏராளமான நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் மறந்து ஒரு உபத்திரவம் சம்பவிக்கின்ற போது கர்த்தருக்கு எதிராக குற்றஞ்சொல்லுகிறவர்களாய் இருக்கின்றோமா? அல்லது யோபுவைப் போல சந்தோஷத்தில் மாத்திரம் அன்றி உபத்திரவத்திலும் கர்த்தரை நெருங்கி வாழ்கின்றோமா? சிந்திப்போம்…….

”ரோமர் 5:3” இல் கூறப்பட்டுள்ளவாறு உபத்திரவத்திலும் பொறுமையுடன் கர்த்தருக்குப் பிரியமானவர்களாக வாழவேண்டும். எமது பாவங்களுக்காக, இயேசுகிறிஸ்து மனுஷ குமாரனாக அவதரித்து, உபத்திரவப்பட்டு, அவமானங்களைச் சந்தித்து, சிலுவையில் அறையப்பட்டார். இயேசுவைப் போல் உபத்திரவம் எமக்கு நேரிட்டதில்லை, நேரிடப்போவதுமில்லை. ஆகையால் உபத்திரவம் வரும்போது இயேசுகிறிஸ்து நமக்காக பட்ட கஷ்டத்தைச் சிந்தித்தோமேயானால் இன்னும் அவரை நெருங்கி வாழ முடியும்.

கர்த்தருடைய இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கின்ற அவருடைய பிள்ளைகளாகிய நாங்கள் எங்களுடைய வாழ்விலே என்ன உபத்திரவம் நேரிட்டாலும் கர்த்தரோடு நெருங்கி வாழ வாஞ்சிப்போம்.

 

 

 

Best Web Design Batticaloa