உள்ளத்தைக் குணமாக்கும் உறவுகளைத்தேடி…

September 12th, 2017

உளநலப்பார்வையிலும், கர்த்தர் கொடுத்த வேதாகமவார்த்தையிலும் கையடக்கத்தொலைபேசியினாலும், ஆடைகளினாலும் வரும் விளைவுகள்.

இன்றைய இளம் வாலிப சமூகம் குறிப்பாக 15 வயது தொடக்கம் 25 வயதிற்கு உட்பட்ட அநேகர் இளம் பராயத்தினர் கையடக்கத் தொலைபேசியினால் வாழ்வை சிதறடித்து பாழாக்கிக் கொண்டு இருக்கின்றனர். முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்தும் நேரத்தைவிட தொலைபேசிக்கு கொடுக்கும் நேரம் தான் அதிகம். இதே நேரம் வேதாகமத்தைப் படியுங்கள் என்றால் நித்திரை வருகின்றது, தலையிடிக்கின என்று கூறி ஓய்வெடுக்க செல்வது போல சென்று காதில் Ear phone மாட்டிக் கொண்டு மீண்டும் கையடக்கத் தொலைபேசியுடன் இருக்கின்றார்கள். இன்று இது ஒரு நாகரீக மோகமாக கையடக்க தொலைபேசிக்கு வாழ்வை அடிமையாக்கி மாணவ மணிகள் தங்கள் கல்வியைச் பாழாக்குகின்றனர்.

இந்த இளம் சந்ததி ஐபோன் என்றும், பேஸ்புக் என்றும், இன்ரநெட் என்றும், தகாத படங்களைப் பார்ப்பதிலும் நேரத்தை செலவிடுகின்றனர். இது இவர்களின் எதிர்காலத்தையே அழித்துவிடுகின்றது. இது ஒரு உளநோயாக இவர்களுக்கு பாதிப்பை உண்டுபண்ணும் என்பதை மறந்தும், பெற்றோரை மதியாமல் சகாக்களுடன் சேர்ந்து கொண்டு பாடசாலைக்கு செல்வதை தவிர்ப்பதும், அடிக்கடி பாடசாலைக்கும், தேவாலயத்துக்கும் தாங்களே விடுமுறை போட்டுக் கொள்வதும். பிரத்தியேக வகுப்பிற்கு செல்வது என்று கூறி தகாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாக்கி தங்கள் கல்வியையும், எதிர்காலத்தையும் நாளுக்கு நாள் அழித்துக் கொள்கின்றனர். கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றன “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.                  (சங்கீதம் 1:1-2) என்று, எத்தனை இளம் வாலிப சகோதர, சகோதரிகள் வேதம் கூறுவது போல நடக்கின்றீர்கள். வேதாகமத்தைத் தூக்கி தலையணைக்கு அடியில் வைத்து விட்டு டச் போனில் Chat பண்ணுவது தான் வாலிபப் பராயத்தினருக்கு பிரியமாயிருக்கின்றது.

இவர்களது பெற்றோர் இவர்களைக் கண்டிக்க முற்ப்பட்டால் அவர்களை காயப்படுத்தும்படி பேசுவதும், சிலர் மரியாதைக்கேடாக நடத்துவதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதுமாக செயற்படுகின்றனர். ஆனால் கர்த்தரின் வார்த்தையோ “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.  (நீதிமொழிகள் 23:22) இப்படியாக இருப்பதற்கு தான் தேவனும் விரும்புகிறார். ஆனால் நீங்களோ பெற்றோர் தண்டித்தால், சகாக்களின் அநுதாபங்களைத் தேட உங்கள் கைகளை, சரீரங்களை பிளேடினால் வெட்டிக் காயப்படுத்துவது, பெற்றோருக்கு எதிராக சண்டை போடுவது, ஒரு பொய்யை மறைக்க அதிகப்படியான பொய்கள் கூறுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஒரு உளநோய் தாக்கம் என்று கூறலாம், சாத்தானின் பிடியால் விழுந்த வாலிபர் கூட்டம் என்றும் கூறலாம்.

வேதாகமத்திலே கூறுவது போல பெற்றோருக்கு பிள்ளைகளைத் தண்டிக்க உரிமை உண்டு. “பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.” “நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (நீதிமொழிகள் 23:13-14) ஆனால் இன்று பெற்றோர் சற்றுக்கடிந்து கொண்டாலே தற்கொலை என்று தவறான முடிவுகளை எழுந்தமானமாக எடுக்கின்றார்கள். தேவன் தந்த உயிரை தேவன் தான் எடுக்க வேண்டும். ஆனால் இயேசுவை விட பெரியவர்களாக நீங்கள் எடுக்கும் தவறான முடிவுகளினால் எந்த வெற்றியையும் காண முடியாது. உங்கள் பெற்றோருக்கு வேதனையையும், அவமானத்தையும் தான் தேடிக் கொடுக்கின்றீர்கள். ஒரு பிள்ளையைப் பெற்ற தாய், தன் மகனையோ, மகளையோ சான்றோர் என பெயர் கேட்டால் எத்தனை மகிழ்ச்சியடைவாள்.

அநேகமான பெற்றோர்கள் பொருளாதார முன்னேற்றம் கருதி பிள்ளைகளுக்கு உறவில் அன்பாகக் கதைக்க நேரம் கொடுப்பதில்லை. இதனால் இவர்கள் பிழையான சகாக்களைத் தேடிச் செல்கின்றனர். அநேகமான பெண் பிள்ளைகள் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சகாக்களுடன் சேர்ந்து பூங்காவிலும், கடற்கரையிலும், நண்பர்களின் வீடுகளிலும் நேரத்தைச் செலவிடுகின்றனர். இப்படிச் செல்லும் நேரங்களில் தங்கள் பாதுகாப்பைப்பற்றி சற்றும் சிந்திப்பது இல்லை. நண்பியின் வீடு சென்று செல்லும்போது அந்த நண்பியின் உறவினர் மூலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்று ஏதுவாக அமைகின்றது.

இன்று நம் பெண் பிள்ளைகளின் நாகரீக உடைகள் ஆண்பாதி ஆடைபாதி என தங்கள் உடைகளை அநாகரீகமாக உடுத்துகின்றனர். இதனாலும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு தாமே வழிகளை காட்டுகின்றனர்.

ஆண் பிள்ளைகள் கையடக்க தொலைபேசி மூலம் நண்பர்களுடனும் தொடர்பு கொண்டு குடிப்பழக்கம், புகைப்பிடித்தல், பாலியல்களுக்கு அடிமையாதல் இப்படியான கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகளாகுகின்றனர். தேவனின் வார்த்தையின் படி “மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.” “குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும். (நீதிமொழிகள் 23:20-21) இப்படியான வார்த்தைகளின் படி வாலிபர்களாகிய நீங்கள் செவிமடுப்பீர்களானால் கல்வியிலும், குடும்ப உறவிலும், வெளி இடங்களிலும், திருச்சபைகளிலும் கீழ்படிந்தவராகவும், நல்லவராகவும் உங்கள் பெற்றோருக்கு பிரமாணிக்கமானவர்களாகவும் திகழ்வீர்கள். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். அநேக வாலிபப்பிள்ளைகள் வேதாகமத்தை படிப்பதும் இல்லை, தேவனுக்காக நேரம் கொடுப்பதும் இல்லை. சிலர் போலியான வாழ்க்கையில் இரண்டும் கெட்டுப்போன நிலையில் தொலைபேசியிலே காலத்தைக் கழிக்கின்றனர். உங்கள் கல்வி, எதிர்காலம், நல்நடத்தைகளை நீங்களே அழிக்க முற்படுகின்றீர்கள். எனவே ஒரு அத்தியவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு கல்வியை நன்கு கற்று வேதாகமத்தின்படி ஒழுக்கமாய் நடந்து உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய நல்ல வளமான இலக்குகளை நோக்கிச் செல்வீர்களாக. (ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். காலத்தியர் 5:16)

 

Best Web Design Batticaloa