என் பிரியமே எழுந்து வா

August 25th, 2017
  1. நமது பிரதிஷ்டையில் தேவன் பிரியம் கொள்கிறார்:

தானியேல் பாபிலோனில் சிறைப்பட்டுப்போன ஒரு யூத வாலிபன். பாபிலோன் சகலவித அருவருப்புகளுக்கும் இருப்பிடம். அங்கே தானியேலுக்கு ஆலயமும், ஆராதனையும், போதகர்களும், போதனைகளும் இல்லை. ஆனால் அவன் சில பிரதிஷ்டைகளைப் பண்ணி சூழ்நிலை எதுவானாலும் அவற்றைக் காப்பாற்ற தீர்மானித்திருந்தான். அப்படியே அவைகளை நிறைவேற்றினான்.

விக்கிரகங்களுக்கு முன் வைக்கப்பட்டு பின்னர் பரிமாறப்படும் இராஜ போஜனத்தினால் தன்னைத் தீட்டுப்படுத்துவதில்லையென்பது முதல் பிரதிஷ்டை. இதை நிறைவேற்றுவதில் அவனுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் எழும்பின. ஆனால் அவன் தன் தீர்மானத்தில் உறுதியாய் நின்றான் தேவனால் உயர்த்தப்பட்டான்.

இரண்டாவதாக சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் தேவ நாமத்தை உயர்த்துவதும். அவன் தனக்கல்ல தன் தேவனுக்கே மகிமையை வரப்பண்ணினான்.

மூன்றாவது இடைவிடாமல் தேவனை ஆராதித்து குறித்த நேரத்தில் முழங்கால்படியிட்டு எருசலேமுக்கு நேராகப் பலகணிகளைத் திறந்து வைத்து வெட்கப்படாமல் ஆண்டவரை நோக்கி ஜெபிப்பதும்.  நாம் அறிந்திருக்கிற படி அவன் சிங்கங்களின் குகையில் போக வேண்டியது வந்த பொழுதும் அவனது பிரதிஷ்டைகளிலிருந்து விலகவில்லை. அவனை தேவன் மிகவும் பிரியமானவன் என்று அழைத்ததில் ஆச்சரியமுண்டோ? இக்கால பிரதிஷ்டை இல்லாத காலம், பிரதிஷ்டை இல்லாத மனிதன் என்ன செய்வான் என்று யாருக்குத் தெரியும். அவனுக்குத்தான் ஒரு தீர்மானம் இல்லையே.

எரேமியா 35-ம் அதிகாரத்தில் ரேகாபின் புத்திரரின் பிரதிஷ்டையைப் படிக்கிறோம். “நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக்கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்ச தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும் உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களில் குடியிருப்பிர்களாக என்று எங்களுக்கு கட்டளையிட்டார். அப்படியே எங்களுடைய எல்லா நாட்களிலும் நாங்களும், எங்கள் ஸ்திரீகளும், எங்கள் குமாரரும், எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும், நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்திக்குக் கீழ்படிந்திருக்கிறோம். எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.”(எரே 35:7-9) கர்த்தர் அவர்களைக் கனம்பண்ணினார்.

இப்படியே யோபு, யோசேப்பு, நெகேமியா போன்ற தேவமனிதர்கள் பிரதிஷ்டையுள்ளவர்களாய் இருந்தார்கள். அப்பிரதிஷ்டையின் காரணமாக அவர்கள் தேவனுக்கு பிரியமானவர்கள் என சாட்சிப் பெற்றார்கள். பிரதிஷ்டை இல்லாத வாழ்க்கை தண்டவாளம் இல்லாத ரயில் போல, கரையில்லாத ஆறுபோல அது கர்த்தர் விரும்பாத வாழ்க்கை.

  1. விசுவாசத்தில் தேவன் பிரியம் கொள்ளுகிறார்:

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாய் இருப்பது கூடாத காரியம்; ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபி 11:6)

விசுவாசம் என்றவுடனே நமது நினைவில் வருவது ஆபிரகாம்தான். அவர் விசுவாசிகளின் தகப்பன். “அவன் கர்த்தரை விசுவாசித்தான். அதை அவர் அவனுக்கு நீதியாக  எண்ணினார்.” (ஆதி15:6) தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவர் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானார். ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல. நாமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. (ரோமர் 4:20-23) விசுவாசத்தினால் ஆபிரகாம் மாத்திரமல்ல நாமும் நீதிமான்கள் ஆக்கப்படுகிறோம். இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற படியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

நமது விசுவாசம் தேவனுக்குப் பிரியமானது. இவ்வுலகம் தேவன் எங்கே என்று கேள்விக் கேட்கிறது. இந்த அவிசுவாசம் நிறைந்த பொல்லாத சந்ததியின் நடுவே, நாம் தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறோம். அவர் நமக்கு பலனளிப்பார். என விசுவாசிக்கிறோம். நம்முடைய இரட்சிப்புக்காக, பரிசுத்தத்துக்காக, சுகத்துக்காக, தேவைகளுக்காக கர்த்தரையே நம்பியிருக்கிறோம். கர்த்தர் தம்மை நம்பியிருக்கிற நமது பிள்ளைகளை என் பிரியமே என்று அழைக்காமல் இருக்க முடியுமா?

யோபு தன்னைக் கொன்றுப் போட்டாலும் கர்த்தர் பேரில் நம்பிக்கையாயிருப்பேன் என்றார். கர்த்தரின் பிரியம் அவர் மேல் இல்லாமல் இருக்குமா? உலகமெல்லாம் தன்னைப் பரிகசித்த போது கர்த்தரின் வாக்கை நம்பி மாபெரும் பேழையை செய்த நோவாவைக் கர்த்தர் மறப்பாரோ?

பொன்னுக்கும் பொருளுக்கும் பின்னாலே உலகம் பைத்தியம் பிடித்து ஓடும்பொழுது, சீயோனை எனக்காக வைத்திருக்கிறார் என கர்த்தரை விசுவாசித்து அவருக்கு பின்னால் ஓடும் தேவப்பிள்ளையின் மேல் அவர் பிரியம் இல்லாமல் இருக்குமா? விசுவாசத்தினாலே தேவனுடைய பிரியத்தைப் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியலை எபிரெயர் 11-ல் படிக்கிறோமே.

  1. தேவனோடு சஞ்சரிப்பதினால்

இருவர் ஒருமனப்பட்டாலொழிய ஒன்றாய் நடந்து போகமுடியாது என ஆமோஸ் சொல்லுகிறார். (ஆமோஸ் 3:3) தேவனோடு நடக்க வேண்டுமானால் அவரோடு எல்லா காரியத்திலேயும் ஒருமனப்பட வேண்டும். அப்படிப்பட்டவர்களில் தேவன் பிரியப்படுகிறார். இது கூடுமா? என்று நாம் கேட்டால் தம்மோடு நடந்த தேவபிள்ளைகளை தேவன் நமக்குச் சுட்டிக்காட்டுவார். ஏனோக்கு 365 வருடம் உலகில் வாழ்ந்தார். அதில் 300 வருடம் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றார். ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற்போனார். தேவன் அவரை எடுத்துக் கொண்டார். அவருக்குப் பின் நோவா தேவனோடு நடந்தார். நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான். (ஆதி 6:9) லேவி தேவனோடு நடந்தான். “சத்திய வேதம் அவன் கையில் இருந்தது. அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை. அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்” (மல் 2:6)

பாத்திரவான்கள் தேவனோடு நடப்பார்கள். ‘ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு! அவர்கள் பாத்திரவான்கள் ஆனபடியால் வெண்வஸ்திரம் தரித்து என்னோடே கூட நடப்பார்கள்’. (வெளி 3:4)

  1. தேவனுக்குப் பயப்படும் பயத்தில்:

அவர் பிரியம் கொள்ளுகிறார். (சங் 147:11) ஒருவன் தேவனுக்கு பயப்படுவானானால் அவன் துணிகரங்கொள்ளமாட்டான். அநேக தீமைகள் அவனை விட்டு ஓடிப்போகும்.

நெகேமியா தேவனுக்கு பயந்தபடியால் சாதாரணமாக அதிபதிகள் வாங்கும் படியை அவன் வாங்குவதில்லை. “எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்கு பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல்; நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கி வந்தார்கள். அவர்கள் வேலைக்காரர்கள் முதலாய் ஜனங்கள் மேல் அதிகாரம் செலுத்தினார்கள். நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.” (நெகே 5:15)

தேவனுக்குப் பயந்து அவர் வழிகளில் நடக்கிறவனுடைய குடும்பம் ஆசீர்வதிக்கப்படும் என்று 128-ம் சங்கீதத்தில் படிக்கிறோம். எப்பொழுதும் பயந்திருக்கிற மனுஷன் பாக்கியவான். சபைகள் தேவபயத்துடன் இருந்தபொழுது வளர்ந்து பெருகிற்று.

தேவ பயம் தேவனது பிரியத்தை நம்மேல் உண்டாக்கும்.

 

 

Best Web Design Batticaloa