ஏற்ற சமயம் சொன்ன வார்த்தை

July 19th, 2018

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதிமொழிகள் 25:11)

தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் கனவில் எக்காளம் ஊதும் சத்தம் கேட்டது. இயேசுகிறிஸ்து நியாயாதிபதியாய் நின்று கொண்டிருந்தார். மக்கள் சாரை சாரையாய் வந்து கொண்டிருந்தனர். வழியில் தூதன் ஒருவர் நின்று கொண்டு சிலரை வலது பக்கம் போக சொல்கிறார். சிலரை இடது பக்கம் போக சொல்கிறார். மிக வேகமாக இச்செயல் நடந்து கொண்டிருக்கிறது. வரிசைப்படி ஒரு மனிதனை வலதுபக்கம் போக சொல்லிவிட்டு அடுத்தவரை இடப்பக்கம் போகும்படி கையை காட்டினார். அந்த மனிதர் தூதனிடம் முந்தின மனிதனை (வலது பக்கம் சென்றவரை) சற்று நிற்க சொல்லுங்கள் என்றார். தூதன் காரணத்தைக் கேட்க, அந்த புறமத நம்பிக்கையுள்ள மனிதர் சொன்னார், “ஐயா அந்த கிறிஸ்தவ நண்பன் 30 ஆண்டுகளாக என்னோடு சேர்ந்து பணியாற்றினார். என்னுடைய உற்ற நண்பன். ஆனால் ஒரு நாள்கூட இயேசுகிறிஸ்துவை பற்றி கூறினதேயில்லை. கூறியிருந்தால் என் நிலைமை இப்படி ஆகியிருக்காதே” என்று கண்ணீர் வடித்தார். திடுக்கிட்டு விழித்து கொண்டார் கிறிஸ்தவ நண்பர். அன்று முதல் ஒரு நாளில் ஒருவருக்காவது சுவிசேஷம் சொல்வோம் என்று தீர்மானம் எடுத்தார். ஏற்ற நேரத்தில் தேவனுடைய வார்த்தையை அறிவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தார்.

ஒருமுறை ஒரு வியாபாரி தன் வியாபாரம் நொடிந்து போனதால் தற்கொலை செய்துகொள்ள தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது, அவரது நண்பர் ஒருவர் அவரை கண்டு, “ஏன் கண்ணீரோடு இருக்கிறாய்?” என விசாரித்தார். கலக்கத்தோடு தன் முடிவை தன் நண்பனிடம் கூறிய போது, அந்த நண்பர் சொன்னார், “வேத கோயிலுக்கு போ, அங்கு நிம்மதி கிடைக்கும்” என்று. அதற்கிணங்கி, தேவாலயத்திற்கு சென்றார். உள்ளே உட்கார்ந்து கண்ணீர் விட்டு கொண்டிருந்த அவரை பார்த்த ஆலய பணியாளர் அவரை பாஸ்டரிடம் கூட்டி சென்றார். பாஸ்டரும் அவருக்கு சுவிசேஷம் சொல்லி, கண்ணீரோடு ஜெபித்து, புதிய ஏற்பாடு ஒன்றையும் கொடுத்தனுப்பினார். என்ன ஆச்சரியம்! தற்கொலை எண்ணம் அடியோடு மாறியது, பெரிய நிம்மதி பிறந்தது. அன்றிலிருந்து கர்த்தரை முன்பாக வைத்து, ஜெபித்து, வியாபாரத்தை தொடர்ந்ததால் சில மாதங்களிலேயே வியாபாரம் செழித்தது. கடன் அடைபட்டது. “கர்த்தருடைய கோயிலுக்கு போ, நிம்மதி கிடைக்கும்” என்று ஏற்ற வேளையில் சொல்லப்பட்ட இந்த வார்த்தை அழிவிலிருந்து ஒரு ஜீவனை காப்பாற்றியது.

பிரியமானவர்களே, தாமதமாய் வந்த நீதி அநீதிக்கு சமம்” என்று சட்டம் சொல்லுகிறது. 15 ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு, 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரு மனிதனுக்கு நீதிமன்றம் இவர் குற்றவாளியல்ல என்று தீர்ப்பு வழங்குவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? கிறிஸ்தவர்களாகிய நமது தாமதம், ஏற்ற நேரத்தில் சொல்லப்படாத சுவிசேஷம் அநேரை ஆத்தும மரணம் அடைய செய்து நித்திய நகரத்திற்கு தள்ளி விடும். இன்று ஒரு தீர்க்கமான முடிவெடுங்கள். வீட்டுக்கருகில், வேலை ஸ்தலத்தில், பள்ளியில், கல்லூரியில் அருகிலிருப்பவர்களுக்கு சுவிசேஷம் சொல்லுங்கள். இதுவே உங்கள் வாழ்வில் நீங்கள் செய்யும் சிறந்த செயலாக இருக்கும். அது அவர்களை நித்திய அக்கினியிலிருந்து காப்பாற்றக்கூடிய ஏற்றவேளையிலே சொல்லப்பட்ட வார்த்தையாக இருக்கலாம், ஆமென் அல்லேலூயா

Best Web Design Batticaloa