ஓட்டத்தில் தெளிவுடன் இருப்போம்

May 25th, 2017

நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் சில வேளைகளில் எம்மை நாமே கேட்க மறுக்கின்ற கேள்விகள் நாம் போகும் பாதை சரிதானா? அல்லது நாம் ஓடிக்கொண்டிருப்பது எதற்காக? ஆனால் நாம் கிறிஸ்தவ வாலிபர்களாக இருக்குமிடத்து எம் ஓட்டத்தை, ஓட்டத்தின் தார்ப்பரியத்தை அறிந்திருந்தாலும் ஓட்டத்தில் இலக்கை அடைய சில காரியங்களை குறித்ததான தெளிவு வேண்டும் என்பதை சற்றே கவனத்தில் கொண்டு ஓடுவது சிறந்ததாயிருக்கும்.

அதே போல், தனி மனித வாழ்க்கை சில வேளைகளில் எம்மை ஒரு சமூக சீர்திருத்தவாதியாக அல்லது ஒரு முற்போக்கு சிந்தனை உடையவனாக வாழ தூண்டினாலும், ஏதோ  ஒரு விதமான கலக்கம் அல்லது பயம் எம்மை கட்டுப்படுத்தி அவ்வாறு வாழ்வதற்கு எம்மை தடுப்பதும் பழகிப்போன ஒன்று.

நம் நாளாந்த ஜீவியத்தில் எம் கண் முன்னே நடக்கும் அக்கிரமங்களை தட்டிக்கேட்க, அல்லது அவ்வாறான காரியங்களுக்கெதிரான குரல் கொடுக்க நாம் எவ்வாறான தயார் நிலையில் இருக்கிறோம். என்பதை சற்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம். அதற்காக தீவிரவாதம், யுத்தங்கள், திட்டமிடப்பட்ட கொள்கைகள், இலஞ்சங்கள், இனவாதபிரச்சனைகள். போன்ற அவ்வாறான மிகப்பெரிதான குற்றங்களுக்கு எதிராக நாம் செயற்பட வேண்டியதாய் இருந்தாலும் இக்கட்டுரை மூலம் உங்களோடு நான் பகிர இருப்பது வேறு சில காரியங்களே. அதற்காக மேற்கூறப்பட்டவற்றில் நாட்டம் செலுத்த தேவையில்லை என்றில்லை.

ஆக, எம்மில் பலர் வெட்கித்து போக வேண்டிய சில பழக்க வழக்கங்களை சமூக சிந்தையோடு நோக்க வேண்டிய அவசியம் இருப்பதை நான் பகிர விரும்பினேன். உதாரணமாக எம்மில் எத்தனை பேர் நாம் வீதியில் செல்லும் போது சாப்பிடுகிற சின்ன டொபி(tofee)யின், கவரை (cover) வீதியில் போடாமல் குப்பைகள் போடுவதற்கென்று இருக்கிற சரியான இடங்களில் போடுகின்றோம்? எத்தனை பேர் வீதியை கடக்கும் போது மஞ்சள் கடவைகளை மட்டுமே பாவிக்கின்றோம்? எத்தனை பேர் பேரூந்தில் பயணிக்கையில் கர்ப்பிணி தாய்மாருக்கு, வயது முதிர்ந்தோருக்கு எழும்பி எமது ஆசனத்தை கொடுத்து உதவுகிறோம்?

எத்தனை பேர் வீதி போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றுகிறோம்? எத்தனை பேர் பொது சேவைகள் உள்ள இடங்களில் வரிசைகளை கிரமமாகக் கடைப்பிடிக்கிறோம்? எத்தனை பேர் பொதுமக்களுக்கு இடைஞ்சலாய் இருக்கின்றோம்? இன்னும் எத்தனை பேர் தேர்தல்களில் எங்கள் ஜனநாயகக் கடமைகளை சரியாக நிறைவேற்றி இருக்கின்றோம்?

எம்மில் எத்தனை பேர் இவ்வாறு விதிமுறைகளை அல்லது நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றாதவர்களை தைரியமாக தட்டிக்கேட்க அல்லது அவர்களுக்கெதிராக கேள்வியெழுப்ப தயாராய் இருக்கிறோம்? இவ்வாறான காரியங்களை நாம் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால் சில வேளைகளில் எம்மை அறியாமல், சில நேரங்களில் நன்கு அறிந்திருந்தும் எம்மால் கடைப்பிடிக்க, பழக்கத்தில் கொண்டு வர முடியாத காரியங்களாக, கவனத்தில் எடுத்துக் கொள்ள தேவையில்லாதனவாக கொள்ளப்படுகின்றன. இவற்றை கடைப்பிடிப்பவர்கள் எம்மை கேள்வி கேட்கும் போது அவர்களை அதட்டி விடுகிறோம் அல்லது ஏதாவது சொல்லி தப்பித்து விடுகிறோம்.

இவற்றைக் கூறி நான் ஒரு சமூக முற்போக்குவாதியாக என்னை சித்தரிக்கவில்லை மாறாக நான் இப்போதிருந்து என்னை பழக்கிகொள்ள அழைப்பதே என்னுடைய நோக்கம்.

புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில். அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும் படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்து கொள்ளுங்கள். என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். (1பேதுரு 2:12) இல் கூறியுள்ளபடி, கிறிஸ்தவ வாலிபர்களாகிய நாம் எந்த வகையில் எம் வாழ்க்கையை மற்றைய சமூக வாலிபர்களுக்கு முன்மாதிரியாக்கி இருக்கிறோம் என்று சிந்திக்க  அழைக்கப்படுகிறோம். இவ்வாறான சில சமூக சிந்தனைகளை எம் நாளாந்த வாழ்வில் பழக்கிகொள்வதன் மூலம் இவர்கள் வித்தியாசமானவர்கள் என்று அவர்கள் கண்களிலும், இதயத்திலும் பதிய முடியும். எம்மை அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று அறிந்துகொள்ள எம்மை நாம் மாற்றும் போது அவர்கள் தானாகவே எம்மை அணுகி எம்முடன் நல்ல மாற்றத்தில் பங்கெடுப்பார்கள் என்பது என் வாஞ்சை. இதன் மூலம் அவர்களை கிறிஸ்துவண்டைக்கு கொண்டுவருவதும் எளிதாய் மாறிவிடும்.

சிறிய கற்களை அகற்ற முயற்சிப்போம் பெரிய கற்கள் தானாகவே நகரும்.

Best Web Design Batticaloa