கர்த்தருக்கு பிரியமான மகள்

September 14th, 2018

ஒருநாள் ஒரு பெண் தன் பரலோக பிதா தன்னோடு பேசும் சத்தம் கேட்டு, ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டுமென்றிருக்கிறீர் என வினாவினாள்.

அதற்கு ஆண்டவர், “நீ எனக்காகச் செய்யவேண்டிய மிக முக்கியமான வேலையொன்று இருக்கிறது. அது எளிய வேலையல்ல, சிலவேளைகளில் மிகக்கடினமாக இருக்கும். ஆனால் நான் உனக்குத் தேவையான பயிற்சியளித்து உன்னைப் பெலப்படுத்துவேன்.

நீ தனியாக இருக்கவேண்டியதில்லை. உன்னோடிருக்க தேற்றரவாளனை அனுப்புவேன். அவர் என்னோடிருந்தவர். அவர் என்னிடத்திலிருந்து புறப்பட்டு வருவார், அவர் உன் மூலமாய் கிரியை செய்வார், உன் வாயைக்கொண்டு பேசுவார். அவர் உன்னை என்னுடைய நல்ல ஒரு கருவியாய். மாற்றுவார்.

என் மகளே உன் வீட்டையும், நாட்டையும், குடும்பத்தையும் விடக்கூடிய அளவுக்கு என்னிடத்தில் நீ அன்பாயிருக்கிறாயா? எனக்காகவும், என் நாமத்துக்காகவும் உன் ஜீவனையும் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறாயா?

உன்னை மீட்க ஒருவரும் இல்லாதிருந்தபொழுது உன்னை இரட்சிக்க நான் என் மகனை அனுப்பினதை நீ நினைக்கிறாயா? அவர் உன் ஜீவனுக்காக எவ்வளவு பெரிதான விலை கொடுக்க வேண்டியிருந்தது. அவர் ஜீவனை விலைக்கிரயமாய் கொடுத்தல்லவா மரணத்துக்கதிகாரியான சாத்தானின் கையிலிருந்து உன் சிறைச்சாலையின் திறவுகோலை அவர் பெற்றார்.

சிறையானோரை மீட்க அவரிடத்தில் இப்பொழுதும் திறவுகோல் இருக்கிறதே. ஆனால் உலகிலுள்ள கோடிக்கணக்காக மக்களுக்கு இந்த இரகசியம் தெரியாமல் இன்னும் சாத்தானின் பிடியில் இருக்கிறார்களே!

மகளே, நான் உனக்குக் கொடுக்கும் வேலை இதுதான். நீ போய் அவர்களையும் என் மகன் நேசிக்கிறார் என்கிற செய்தியைச் சொல்ல வேண்டும்; அவர் உனக்கு என்ன செய்தார் என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்; என்னுடைய அன்பையும் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

என் மகளே, என் கேள்விகளுக்கு உன் விடை என்ன? நான் உன்னைப் பலவந்தம் பண்ணேன்; உன்னிடம் வேண்டுகிறேன், அவ்வளவுதான்.

இதைக் கேட்டபொழுது அம்மகள் அழுதுவிட்டாள். வீட்டையும், நாட்டையும் விடச்சொன்னதினால் அவள் அழவில்லை; வேலையின் கடினத்தை நினைத்தும் அவள் அழவில்லை. அவர் தன்னை அழைத்ததினாலேயே அழுதாள்; அவர் அவளைத் தெரிந்து கொண்டதினாலேயே அழுதாள்.

என் அன்பு மகளே, உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன் என்றார் அப்பா. ஆம் அப்பா, நான் செய்வேன், நான் போகிறேன், நான் பயப்படடேன். அப்படியே போனாள். ஏழு வருட காலம் அவள் தன்னை ஊழியத்துக்காக ஆயத்தப்படுத்தினாள். அப்பொழுது அவர், மகளே எல்லாம் நன்றாய் செய்தாய். உன்னை ஆப்ரிக்காவின் இருண்ட பகுதியில் எனக்காகப் பாடுபடும் அன்பு மகள் ஒருத்திக்குத் துணையாக அனுப்புகிறேன். அவள் தனக்கு ஒரு தோழி வேண்டுமென்று என்னிடத்தில் கேட்டாள்.

வேலை எளிதல்ல ஆனால் நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன். நீ உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன். நான் உன்னை நேசிக்கிறேன்!

அம்மகள் தன் பரம தகப்பனின் வாக்குறுதிகளையும் பிடித்துக்கொண்டு தான் அறியாத தேசத்துக்குக் கடந்து சென்றாள்.

இந்தப் பரம தகப்பன் இப்படியே உங்களையும் அன்புடன் அழைக்கிறார், உங்கள் விடை என்ன?

 

 

Best Web Design Batticaloa