கையின் கீழ் அடங்கியிரு

March 21st, 2017

எனக்கன்பான சகோதர, சகோதரிகளே, பரிசுத்த வேதாகமத்திலே ஆதியாகமம்(16:1-10) வரையான பகுதியில் காணப்படும் சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே. ஆம் ஆபிரகாம்,சாராளின் வாழ்க்கைச் சம்பவம்தான்.

கர்ப்பவதியாய் இருந்த ஆகார் தனது எஜமானியாகிய சாராளால் மிகவும் கடினமாக நடாத்தப்பட்ட படியினால் அதனை பொறுக்காது தாங்க முடியாமல் அவளை விட்டு வனாந்திரத்திற்கு ஓடிப்போகிறாள். அங்கே நீரூற்றண்டை அருகிலே கர்த்தருடைய தூதரானவர் அவளைக் கண்டு: சாராளின் அடிமைப் பெண்ணாகிய ஆகாரே எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார். அவள்: நான் என் நாச்சியாராகிய சாராளை விட்டு ஓடிப்போகிறேன் என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப் போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு என்றார். பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன். அது பெருகி எண்ணிமுடியாததாய் இருக்கும் என்றார்.

ஆம் நாம் இன்றும் கூட இவ் ஆகாரைப் போல முடிவு எடுக்க முற்படுகின்றோம். வீட்டில் அனைவராலும் புறக்கணிக்கப்படும் வேளையில்: உற்றார், உறவினர்கள், நண்பர்களால் உதாசீனம் செய்யப்பட்டு கைவிடப்பட்டு கலங்கும் வேளையில் வீட்டைவிட்டு/ அச் சமூகத்தை விட்டு ஓடிவிட நினைக்கிறோம். அல்லது வேலை செய்யும் இடங்களில் நம் அதிகாரிகளால்/சக ஊழியர்களினால் கடினமாய் நடத்தப்பட்டு சுய மதிப்பை இழந்து நிற்கும் சந்தர்ப்பங்களில் இவ்வேலையை விட்டு வெளியேறி விடுவோம் என்று முடிவுகள் எடுத்து விடுவோம். ஆனால் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து இன்று உங்களுக்குத் தரும் வார்த்தை “கையின் கீழ் அடங்கியிரு”

ஆம், எந்த இடத்தில் ஒடுக்கப்பட்டோமோ, எந்த இடத்தில் அவமானப்பட்டு துன்புறுத்தப்பட்டு/ கடினமாக நடத்தப்பட்டோமோ அவ் இடத்தை விட்டு ஓடிப்போகாமல் அவர்களின் கையின் கீழ் பொறுமையோடு அடங்கியிருக்கும்படி தேவன் கூறுகிறார்.

அன்று ஆகார் மீண்டுமாய் சென்று அடங்கியிருந்தபடியினால் ஆதியாகமம் 16:10-ம் வசனத்திலுள்ளபடி ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொண்டாள். இன்று நாமும் பொறுமையோடு, விசுவாசத்தோடும் தேவ வசனத்திற்குக் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கும் போது அவர்கள் (துன்புறுத்தியவர்கள்) கண்கள் காணும்படி தேவன் நம்மை உயர்த்தி வைப்பார் என்பது அதிக உறுதி தேவன் தரும் ஆசீர்வாதத்திற்கு உடன் சுதந்திரராயும் இருப்போம்.

Best Web Design Batticaloa