கொலையாளியை மன்னித்த கிறிஸ்டி

March 21st, 2017

கிறிஸ்டி ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியை, ஒரு சமூகப் பணியாளரும் கூட. “மன்னித்தல்” என்ற கோட்பாட்டை முதன்மைப்படுத்தி தான் அவள் அனைவருக்கும் போதிப்பாள். ஆனால் அவள் எதைப் போதித்தாளோ அதுவே அவளுடைய வாழ்க்கையில் சோதனையாக வந்தது.

ஒரு நாள் மாலை தனது சிநேகிதியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. செய்தி பேரதிர்ச்சியை அளித்தது. செயலற்றவளாய் நின்றாள். “உன்னுடைய மகன் மாற்கு சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டது வேறு யாருமல்ல அவனுடைய சொந்த மாமனார் சார்லஸ்தான். மாற்கின் மனைவிக்கு அவனது மாமனாருக்கும் ஏதோ கடுமையான தகராறு ஏற்பட்ட வேளையில் மாற்கு குறுக்கிட்டதின் காரணமாக அவன் கொல்லப்பட்டான்” இதுதான் வந்த செய்தி, மாற்கின் இழப்பை கிறிஸ்டியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சார்லஸ் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, நீதி விசாரணையில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சமூகப்பணியாளர் என்ற முறையில் எந்தச் சிறைச்சாலைக்கு  கிறிஸ்டி பார்வையிடச் சொல்லுவாளோ அதே சிறைச்சாலையில் சார்லஸ் அடைக்கப்பட்டார். அது அவர்களுக்கு  இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கிற்று. அவள் சிறைச்சாலைப் பார்வையாளர் பணியை விட்டுவிடத் தீர்மானித்தாள்.

ஒருநாள் இரவு அவள் கண்ணீரோடு ஜெபித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஆண்டவர் “நீ சார்லஸை மன்னிக்கவேண்டும்” என்று வலியுறுத்திக் கூறினார். “ஆண்டவரே, அவர் என் மகனைக் கொன்றவர், அவரை நான் மன்னிக்க முடியாது” என்று கதறி அழுதாள். ஆனாலும் ஆண்டவருடைய ஆலோசனையைத் தள்ள அவளால் முடியவில்லை. ஆகவே ஆண்டவர் சொன்னதைச் செய்ய முயற்சித்தாள்.

ஒரு நாள் சார்லஸ் வைக்கப்பட்டிருந்த அந்த சிறைச்சாலைக்குச் சென்றாள். கிறிஸ்டி எதிர்பாராத வகையில் சிறைச்சாலை வராந்தாவில் சார்லஸ் கிறிஸ்டியை நோக்கித் தயங்கித் தயங்கி மெதுவாக வந்தார். கிறிஸ்டி அவரை நேருக்குநேர் பார்த்தாள். சார்லியின் முகம் துக்கத்தைப் பிரதிபலித்தது. கிறிஸ்டி சார்லஸிடம் சார்லஸ் உங்களை நான் மன்னித்து விட்டேன். மாற்கின் இழப்பால் என் துக்கம் இன்னும் நீங்காவிட்டாலும் உங்கள் மீது கொண்டிருந்த பகைமை உணர்வு நீங்கி விட்டது. என்று கூறினாள். ஒரு பெரிய சமாதானம் தன்னை ஆட்கொண்டதை உணர்ந்தாள். மன்னிப்பதின் காரணமாகத் தான் பெற்ற சமாதானத்தை பின்னர் சாட்சியாகப் பகர்ந்து வந்தாள்.

Best Web Design Batticaloa