சிறிய பொய்தானே

September 8th, 2017

ஜோ கானரியும், பில் சான்டர்ஸும் அந்த ராணுவப்பிரிவின் ஒரே பகுதியில் வேலை செய்பவர்கள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் ஒன்றாகவே இருந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்களாயிருப்பினும் இருவருடைய சுபாவங்களும் மாறுபட்டவை. பில் உண்மையும் நேர்மையுமானவன். ஜோ அடிக்கடி பொய் பேசும் பழக்கமுடையவன். ஜோ உருவாக்கும் பொய்க் கதைகளை பில் அடிக்கடி நம்பி ஏமாந்து விடுவதுண்டு.

ஒரு இரவில் இருவருக்கும் காவல் பணி கொடுக்கப்பட்டிருந்தது. பில் கவனத்துடன் கண்காணித்தான். ஜோ தூங்கி விட்டான். இரவில் முகாமில் ஏதோ திருட்டுப் போய்விட்டது. ஜோ தனது தவறை விளங்கிக் கொண்டு மேலதிகாரியிடம் பில் காவல் செய்யும் வேளையில்தான் திருட்டு நடந்தது என்று பொய்யாகக் கூறினான். குற்றம் தீவிரமானதாகக் கருதப்பட்டு பில் ராணுவச்சிறையில் அடைக்கப்பட்டுவிட்டான்.

ஜோ இதைக் கேள்விப்பட்டபோது தான் செய்த தவறை உணர்ந்தவனாக மேலதிகாரியிடமும் பில்லிடமும் மன்னிப்புக்கேட்டுவிடத் தீர்மானித்தான் ஆனால் அன்றிரவே அவன் அருகிலுள்ள வேறொரு நகரத்திற்குச் சென்று அங்குள்ள தளபதியிடம் ஒரு செய்தியை அறிவித்து வருமாறு பணிக்கப்பட்டான். “அதனாலென்ன, இன்னுமொருநாள் அந்த சிறையிலிருப்பது பில்லுக்குக் கஷ்டமாயிராது” என்று சொல்லிக்கொண்ட ஜோ பயணமானான்.

அவன் மறுநாள் திரும்பி வந்தபோது, ஒரு ராணுவவீரன் அவனிடம் வந்து, “ஜோ நீ ஊரிலில்லாதபோது ஒரு பயங்கர சம்பவம் நேரிட்டுவிட்டது” என்றான். உடனே அதிர்ந்துபோன ஜோ, பில்லை நினைத்துக்கொண்டு, “என்ன, பில் எப்படியிருக்கிறான்? என்னவாயிற்று?” என்று வினாவினான்.

“இன்று காலையில் சிறையில் உள்ள சூளை வெடித்ததில் சிறைக்கூடம் முற்றிலும் எரிந்துவிட்டது. உன் நண்பன் பில்லும் அதில் மாண்டுபோய்விட்டான்.” ஜோ, தலையில் இடி விழுந்தவனைப்போல் நிலைகுலைந்து போய்விட்டான். “ஐயோ, பில் இது உனக்குச் சம்பவிக்கக்கூடாதே! எல்லாமே என் தவறுதானே. சரிசெய்ய நினைத்தேனே, ஐயோ பில்…

அதன் பின் ஜோ தனது வாழ்நாள் முழுவதும் இதற்காக வருந்தினான். தனது அன்பான நண்பனின் மரணத்திற்கு அவனது ஒரு சிறிய பொய் காரணமாகிவிட்டன என எண்ணி காலமெல்லாம் அவன் வருந்தியும் ஆறுதலடைய முடியவில்லை. இது ஒரு உண்மைக் கதை.

அநேகர் சிறிய பொய்தானே என்று நினைத்து பொய் பேசுகின்றனர். அது விரைவில் பெரிய தீமைகளைக்கொண்டு வரும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அடுத்த முறை விளையாட்டுக்குக் கூட பொய் பேச வேண்டிய சூழ்நிலை வருமாயின் ஜோவை நினைத்துக்கொள்ளுங்கள். அதற்கும் மேலாக இயேசுவை நினைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு முன்பாக நாம் யாவரும் நியாயந்தீர்க்கப்படும் படியாக நிற்கவேண்டும்.

“பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் பங்கடைவார்கள்.” (வெளி 21:8)

Best Web Design Batticaloa