தீமையை நன்மையினாலே வெல்லு!

May 26th, 2017

கிறிஸ்துவுக்குள் அருமையான உறவுகள் அனைவருக்கும் இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இன்றைய நடைமுறை வாழ்க்கையிலே பழகுகின்ற அநேக நண்பர்களோடு பேசுகின்ற பொழுது சொல்லுவார்கள் அவர் எனக்கு இப்படிச் செய்து விட்டார் இவரை நான் பழி வாங்காமல் விடமாட்டேன். இவர் கஷ்டப்பட்டு வேதனைப்படுவதை நான் உயிரோடு இருக்கும் போதே என் கண்கள் காணவேண்டும் இப்படியாக பல திட்டித் தீர்க்கும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவார்கள்…

ஆனால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எம் ஒவ்வொருவரிடமும் இருந்து எதிர்பார்ப்பது இதையல்ல. மாறாக இப்படிப்பட்டவர்களை மன்னிக்க வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்றே. ரோமர் 12:9-10 வசனங்கள் இப்படியாகக் கூறுகிறது. “உங்கள் அன்பு மாயமற்றதாய் இருப்பதாக தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொண்டிருங்கள். சகோதர சிநேகத்திலே ஒருவர் மேலொருவர் பட்சமாயிருங்கள். கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள். எனவே நாம் ஒவ்வொருவரும் நன்மை பயக்கக்கூடிய காரியங்களை சிந்திப்போமானால், தீமையான சிந்தனைகள் எம்மை விட்டு ஓடிப்போய் விடும்.

உன்னைப்போல் உன் அயலானையும் நேசி என்ற ஆண்டவரின் அன்புக் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டிய பொறுப்பை எம் ஒவ்வொருவரிடம் ஆண்டவர் தந்திருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மற்றவர்களைக் குறைவிலே தாங்குவது – மாறாக குறை கூறுவதல்ல!, மன்னிப்பது – மாறாக பழிக்குபழி வாங்குவதல்ல!, உண்மையான அன்பு செலுத்துவது – மாறாக பேச்சளவிலான போலியான அன்பு செய்வதல்ல!, மற்றவர்களை மனதார ஆசீர்வதிப்பது – மாறாக நீ மண்ணோடு மண்ணாகப் போவென்று சபிப்பதல்ல! இப்படியான பல காரியங்களை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறியது மாத்திரமல்ல தன்னுடைய நடைமுறை வாழ்க்கையிலும் இதனை வாழ்ந்து காட்டினார். எம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பழிக்குப் பழி வாங்கும் பகைமையான தீய எண்ணம் மறைந்து மன்னிக்கும் மனப்பான்மை எம் உள்ளத்தில் மலர வேண்டுமென்றால் எம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இயேசுக்கிறிஸ்து தங்குவதற்கு இடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான்  உண்மையான மன்னிப்பை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். ரோமர் 12:17-19 வசனங்கள் சொல்கிறது. ஒருவனுக்கு தீமைக்கு தீமை செய்யாதிருங்கள். எல்லா மனுஷருக்கும் முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே பழி வாங்குதல் எனக்குரியது நானே பதிற் செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எனவே எனக்கு அருமையான சகோதரனே! சகோதரியே! எம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் நகர்வுகளில் இருந்தும் மற்றவர்கள் கிறிஸ்துவைக் கண்டு கொள்ளவேண்டுமென்ற சிந்தையை எமக்குள்ளே நிலை நிறுத்தியவர்களாக கிறிஸ்துவின் முன்னுதாரணமாக எமது வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டு செல்வோம். அப்போது தான் கிறிஸ்துவை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற பிற மக்களும் கிறிஸ்துவண்டை வருவதற்கு ஒரு வாய்ப்பாக, வழியாக இருக்கும்.

எனவே கிறிஸ்துவின் பெலத்தோடு கூட தீமையை நன்மையினாலே வெல்ல எம்மை நாம் கிறிஸ்துவண்டை ஒப்புக் கொடுத்து வாழ்வோம். பிறரையும் கிறிஸ்துவின் அன்பை ருசிக்கச் செய்வோம் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

Best Web Design Batticaloa