பர்வதங்கள் அதிர்ந்து, மலைகள் கரைந்து போகும் (நாகூம் 1:5)

September 7th, 2017

“எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடி ஆகும்.” (மாற்கு 11:23)

மலையை நகர்ந்து போகச் செய்யும் விசுவாசத்துடன் ஜெபிப்பது எவ்வாறு? முதலாவது நாம் மலையின் அளவைக் கண்டு மலைத்துப்போயிருக்கும் நமது கண்களைத் திருப்பி, அதை பெயர்த்துக் கடலிலே போடப்போகும் சர்வ வல்லவரை நோக்கவேண்டும். இரண்டாவதாக அவரை நம்பி அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து முன்நோக்கிச் செல்லவேண்டும்.

நாம் தேவனோடு சேர்ந்து நடக்கத் துவங்கும் போது, நமது விசுவாசம் வளர்ந்து, நமது நம்பிக்கை அதிகமாகும். நமது ஜெபத்திற்கும் வல்லமை உண்டாகும்.

இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு தேவன் வாக்குப்பண்ணின தேசத்தின் எல்லையருகே வந்தபோது, அதை வேவு பார்க்கப் பன்னிரண்டு வேவுக்காரர்களை அனுப்பி வைத்தார்கள். அதில் பத்துபேர் திரும்பி வந்து “அது நல்ல தேசம். எல்லாம் பெரிதாயிருக்கிறது. ஆனால் அதின் குடிகள் நம்மால் வெல்ல முடியாத அளவு பெரிய ராட்சதர்கள்” என்று சொன்னார்கள். இரண்டு பேர் மட்டும், “தேவன் வாக்குத்தத்தம் செய்ததைத் தர உண்மையுள்ளவர், எனவே நாம் அவரது பெலத்தைச் சார்ந்து முன்னேறுவோம்” என்றனர். அந்தப் பத்து பேர்களும் மலையைப் பார்த்துப் பின்னிட்டு நின்றபோது இரண்டு பேர் மட்டும் அந்த மலையை நகர்த்த வல்ல தேவனை நோக்கிப் பார்த்தனர்.

இன்று உயிர் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்வில் தடையாக நிற்கும் ஒரு மலை இருக்கும். அது ஒருவேளை அவனது மேற்கொள்ள முடியாத பாவப் பழக்கமோ, துயரமாக மாறிவிட்ட திருமண உறவோ, அலுவலகப் பிரச்சனையோ, பணத்தேவையோ அல்லது நோய்களோ…..! இன்று நம்மால் நகர்த்த முடியாமல் குறுக்கே நிற்கும் மலை எது? அதன் நிழலிலேயே பயந்துகொண்டு வெகு காலமாக நாம் நின்று பழகிவிட்டபடியால், இருளில் நிற்பது கூட நமக்குப் பழகிவிட்டதுபோல் இருக்கிறதா? “ஜெபித்து என்ன பயன்?” என்பதுபோல மனம் சோர்ந்து நமது ஜெபங்களை ஏறெடுக்கின்றோமா?

“கலங்காதிருங்கள். நான் உங்களுக்குத் தரும் ஆலோசனை உங்கள் ஜெபத்தின் மையக் கருத்தை மாற்றி அமையுங்கள். உங்கள் மலை எவ்வளவு பயங்கரமானது என்று தேவனிடம் நீங்கள் வர்ணித்துக் கொண்டிருக்கவேண்டாம். அது எப்படிப்பட்டது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். உங்கள் கவனத்தை, அந்த மலையை நகர்த்தப்போகிற தேவனுடைய சர்வ வல்லமையை நோக்கித் திரும்புங்கள். அவரது மகிமை, பராக்கிரமம், அவரது நம்பத்தகுந்த தன்மை இவற்றை நோக்கிப் பார்த்து துதியுங்கள். பின்பு அவர் நடத்துக்கின்ற பாதையில் துணிந்து காலடி எடுத்து வைத்து முன்செல்லுங்கள். மலை தானாகவே ஒதுங்கி வழிவிடுவதைக் காண்பீர்கள்.”

Best Web Design Batticaloa