மகா ஞானமுள்ளவைகளில் ஒன்று

April 26th, 2017

பூமியில் சிறியவைகளாயிருந்தும் மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. அவைகளில் ஒன்றுதான் அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தை சம்பாதிப்பது “எறும்பு” என்று (நீதிமொழிகள் 30:25) கூறப்பட்டுள்ளது.

கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்தார். அநேக உயிரினங்களைப் படைத்தார். எண்ணிலடங்கா உயிரினங்களிலே மகா ஞானமுள்ளவைகளில் ஒன்றாக பரிசுத்த வேதத்தில் எறும்பு சிறப்பு பெற்று  நிற்பதைக் காணலாம். மனிதனை  இந்த இடத்தில் மகா ஞானமுள்ளவனென்று கூறாது. அற்பமான ஜெந்துவாகிய எறும்பை வேதாகமத்திலே சிறப்பாகக் கோடிட்டுக் காட்டியுள்ளதைப் பார்க்கின்ற எமக்கு சிந்திக்கத்தூண்டுகிறதல்லவா! அந்த சிறிய ஜெந்துவைப் போல நாமும் ஞானமாய் நடக்க எந்தெந்த சந்தர்ப்பத்தில் முற்படுகின்றோம். என்று சிந்தித்திருக்கிறோமா? முற்பட்டிருக்கின்றோமா?

நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். கேள்வி கேட்டுப் பார்ப்போம். எறும்புகளை நாம் அவதானித்தால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். தமக்குத் தேவையான உணவைத் தாமே தேடிக் கொள்ளும், தமக்குக் கட்டளையிட ஒரு தலைவன் கூட இல்லாதிருந்தும் எப்பொழுதும் வரிசையாக ஒற்றுமையாக சீரான பாதையிலே பயணிப்பதை அவதானிக்க முடிகிறதல்லவா? அதுமாத்திரமல்ல, ஒரு ஆகாரத்தையோ, பொருளையோ கொண்டு செல்லும் பொழுது அந்த தனி எறும்பினால் முடியாதவிடத்து ஒற்றுமையாக கூட்டமாக ஒன்று சேர்ந்து தங்கள் இருப்பிடத்திற்கு அப்பொருளையோ, உணவையோ கொண்டு சேர்ப்பதைக் காணுகின்ற பொழுது எறும்பினிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை எத்தனை! எத்தனை! தமக்குத் தேவையான உணவுகளைக் கோடைகாலத்திலேயே சேர்த்து வைப்பதைப் பார்க்கும் பொழுது அதனுடைய முன்னாயத்தம் எவ்வளவு சிறப்பானதாக இருக்கின்றது என்று விளங்குகின்றதல்லவா?

மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எம்முடைய வாழ்க்கையிலே  இப்படிப்பட்ட ஒற்றுமை, மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புகள், ஆண்டவருடைய வருகையை சந்திக்க முன் ஆயத்தம் இப்படியாக பல காரியங்களை இந்த அற்ப ஜெந்துவாகிய எறும்பினிடத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். சிந்திப்போம்! செயற்படுவோம்! கற்றுக்கொள்வோம்! ஆயத்தமாவோம்!

 

 

 

Best Web Design Batticaloa